"தர்மம் செய்தால் உன்னிடம் இருக்கின்ற செல்வம் மேன்மேலும் பெருகும். தர்மம் எங்கே இருக்கிறதோ அங்கே செல்வத்திருமகள் நிரந்தரமாகத் தங்கி ஆசிர்வாதத்தை அள்ளிக்கொடுப்பாள்.'
பணவரவுக்கான கோட்பாட்டை ஆன்மிக உலகத்தினரும் ஜோதிடப் பண்டிதர்களும் பல்வேறு வகையாகச் சொல்லி வந்தாலும், இப்படி ஒரு வாழ்த்துச் செய்தியை தர்மதேவதையே நேரில் வந்து கூறிச் சென்றிருக்கிறாள்.
தெற்கு கர்நாடகாவில் பெல்தங்கடி வட்டத்தில் தர்மதேவதை காட்சி கொடுத்த தர்மஸ்தலம், கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அபூர்வ நிகழ்வால் நம் தேசத்தையே திரும்பிப்பார்க்க வைக்கிறது.
தர்மதேவதையின் பசியாறல்
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்த தெற்குக் கன்னடப் பகுதியில் சிறிய கற்கோவில் மட்டுமே இருந்தது.
அங்கே குமார ஹெக்டே என்ற- மகாவீரர் ஜெயின் வழி பக்தர் சிவனை வழிபட்டுவிட்டு, இரவு எட்டு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஒரு பெண் அவரிடம், ""எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. ஏதேனும் சாப்பிடக் கொடுங்கள்'' என்று கேட்டாள்.
அந்த நேரத்தில் இரண்டு பச்சை வாழைப்பழமும் சில கனிகளும் மட்டுமே கையிலிருக்க, அவற்றைக் கொடுத்தார். அந்தப் பெண், ""இன்றிரவு தங்குவதற்கு இடம் கொடுங்கள்'' என்று கேட்க, தன் வீட்டில் தங்கும்படி கூறிய அவர் அறுசுவை உணவு சமைத்துப் பரிமாறினார். ""இன்று நன்றாகப் பசியாறினேன்'' என்று திருப்தியுடன் கூறிவிட்டு அப்பெண் உறங்கச் சென்றாள்.
கனவில் சொன்ன அருள்வாக்கு
சிவபக்தரான குமார ஹெக்டேவும் அவரது குடும்பத்தினரும் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
நள்ளிரவில் அவரது கனவில் ஒரு பெண்மணி அலங்காரத் தோற்றத்துடன் காட்சி தந்து, ""உன் வீட்டில் பெண் வடிவில் வந்து தங்கியிருக்கும் நான் தர்மதேவதை. எனக்குப் பசியாற அறுசுவை உணவளித்து இடமும் கொடுத்ததுபோல, எல்லா மக்களுக்கும் அன்னதான தர்மம் செய்வாய். நான் மகாலட்சுமி ரூபம் கொண்டு எப்போதும் உன்னோடு இருந்து உதவிகள் செய்வேன். நீதான் இங்கே தர்மாதிகாரி. பக்தர்கள் கூட்டம் வெள்ளம்போலத் திரண்டுவரும். உனக்கு எண்ணமுடியாத செல்வம் வந்து கொண்டே இருக்கும். எழுத்தறிவித்தல், அன்ன தர்மசேவைகளைத் தொடர்வாயாக!'' என்று ஆசிர்வாதம் செய்து விடைபெற்றாள்.
கண்விழித்தவர் தர்மதேவதை இட்ட கட்டளைப்படி அன்னமளிக்கும் சேவையைத் தொடர்ந்து, நாளடைவில் சிவபெருமானை ஸ்ரீமஞ்சுநாத சுவாமி என்ற பெயரிலும், அம்பிகையைக் கன்னியாகுமரி தேவி என்ற பெயரிலும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.
நந்தி, பலிபீடம் எதிரில் அமைய, அருகில் மேற்கு முகமாக ஸ்ரீஅன்னப்ப சுவாமி உற்சவராக தனி பீடத்தில் காட்சி தருகிறார். தற்போது பக்தர்கள் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரத்துக்குமேல் தரிசனம் செய்கிறார்கள். பண்டிகைக் காலங்களில் ஒரு லட்சம் பக்தர்களும் பல மாநிலங்களிலிருந்தும் பிற தேசங்களிலிருந்தும் வந்து மஞ்சுநாதசுவாமியை தரிசித்து பிரார்த்தனைகளைச் செலுத்திவருகிறார்கள்.
தர்மஸ்தலா என்னும் இந்தப் புனிதத்தலத்தின் வரலாறு கூறுகிற முக்கியச்செய்தியே, "தர்மப்படி நடந்துகொள்ளும் மனிதர்களுக்கு தர்மதேவதை திருமகளாய் எப்போதும் செல்வ வளத்தைக் கொடுப்பாள்' என்பதுதான்.
நேத்ராவதியின் பெருமை
தர்மஸ்தலா கோவிலின் தெற்குப் பக்கம் நேத்ராவதி என்னும் புனித நதி ஓடுகிறது. பளிங்கு போன்ற தூய்மையான நீர். பரமனும் பராசக்தியும் தர்மதேவதையும் இந்த நதியில் புனித நீராடியதாக வரலாறு. சுவாமிக்கு இந்த நதியிலிருந்துதான் நீர் எடுத்துச் சென்று தினமும் காலை 7.00 மணிக்கு ஸ்ரீருத்ரம் சமக மந்திர ஒலியோடு அபிஷேகமும் மகாதீபாராதனைகளும் நடைபெறுகின்றன. பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்திவிட்டு இப்புனித நதியில் நீராடுவதால் தங்கள் பாவங்கள் அகன்று ஸ்ரீமஞ்சுநாதரின் அருளால் பிரார்த்தனை நிறைவேறிவிடுவதாக நம்பிக்கையோடு கூறுகின்றனர்.
தர்மதேவதையின் அருளாசி பெற்ற ஹெக்டேயின் வம்சத்தைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்டே என்பவர் தற்போது தர்மாதிகாரியாகச் செயல்படுகிறார். தர்மதேவதை இன்னும் அங்கே செல்வமகளாக தனதான்யங்களை கொண்டு சேர்க்க, அன்ன தர்மமும் பிற தர்மங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
நாம் வாழுகின்ற பூமியை கர்மபூமி, தர்மம் செய்யும் பூமி என்று உயர்வாகச் சொல்லிவைத்தனர்.
வேதங்களோ, "தர்மோ: ரக்ஷதி ரக்ஷித:- தர்மத்தைக் காப்பாற்றுபவன் இவ்வுலகில் காக்கப்படுவான்' என்று சொல்கிறது. தர்மம் என்பதற்கு நடைமுறைப்பழக்கம், சட்டம், நற்குணம், நல்லொழுக்கம், நேர்மை, தூய்மை, கடமை, நீதி, சமத்துவம், தெய்வ பக்தி, தியாகம், நல்லோர் சேர்க்கை, குருவின் இருப்பிடம் என்று பலவாறாகப் பொருள் கொள்ளலாம்.
நாம் வழிபடுகின்ற சக்தி உபாசனா மார்க்கத்தில் தர்மதேவதை உபசக்தியாக வருகிறாள். ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தில் 255-ஆம் நாமாவளி "தர்மா தர்ம விவர்ஜிதா' என்றும், 884-ல் "தர்மா தாரானய நம: என்றும், 958-ல் "தர்மிண்யை நம' என்றும் 959-ல் "தர்வர்தீன்யை நம' என்றும் தர்மதேவதையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மதேவதையாகத் திருமகள் எல்லாருக்குமே காட்சி தருவாள்.
யார் தர்மாதிகாரி ஆகலாம்?
இந்த யோகத்தைப் பெற தனகாரகன் குரு மற்றும் சூரியனின் நிலையை அறியவேண்டும்.
லக்னாதிபதி 10-ஆவது வீட்டில் இருந்தால் ஜாதகர் பெற்றோரைவிட தர்மப்பிரபுவாக இருப்பார்.
குரு, சந்திரன் அல்லது சுக்கிரன், சந்திரன் 5, 11-ல் அமர்வது, புதன் மேஷம் அல்லது கடகத்தில் இருந்தால் தர்மாதிகாரி யோகம் அமையும்.
புதன், குரு, சுக்கிரன் மூவரும் ஒரே வீட்டில் சேர்ந்திருக்க, ஜாதகர் மதம் தொடர்பாகப் பணி செய்து தர்மாதிகார நிலை பெறுவார்.
சனி 4-ஆம் வீட்டில் இருந்து, 4-ஆவது வீடு, மகரம், துலாம், கும்பமாக இருப்பின் இறை தரிசனத்தால் உயர்வார். குரு 9-ஆம் வீட்டில் அல்லது 11-ஆவது வீட்டில் இருந்து சூரியன் 5-ல் இருந்தால் ஜாதகர் தர்மயோகி ஆவார்.
ராகு அல்லது சனி, செவ்வாய், சூரியன் 11-ல் சேர, தர்மகர்மங்களுக்கு அதிகாரம் செய்து தரும் யோகத்தைப் பெற்று, தனங்களைக் கட்டிக்காப்பார்.
இப்படியாக முக்கிய கிரகாதிபத்யங்கள் தவிர 161 அம்சங்கள் ஒருவர் ஜாதகத்தில் இருப்பதைக் காணலாம். சிலருக்கு தர்மகர்மாதிபதியாகும் யோகம் இருந்தும் செயல்படாமல் இருந்தால் தர்மச்சக்கரத்தை தினமும் கண்டு, தர்மதேவதையை தியானித்து வந்தால் அந்த யோகம் வரும்.
தர்மச்சக்கரமும் தர்மதேவி தியான முறையும்
இந்த உலகம் தர்மம் என்ற அச்சில்தான் சுழன்றுகொண்டிருப்பதாக நம்புகிறார்கள். அதன்படி நாம் கடைப்பிடிக்கின்ற தர்மச் செயல்களே சக்கரத்தின் ஆரங்கள். இதைக் கண்முன் நிறுத்தி தர்மசக்தியை விசேட தியான முறையால் வணங்கி வந்தால் நாம் விரும்பிய பயனும் முன்னேற்றமும் கைகூடும்.
"அம்பிகை சொரூபிணியே! தர்மதேவதையே! வாழ்க்கையில் இன்றுமுதல் தர்மப்படி நடந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன். அதற்காகக் கடவுளின் தூதுச் செல்வியாக உன்னைக் காணும் பாக்கியம் பெற்றுள்ளேன். நான் செய்யும் தர்மகர்மங்களுக்குத் தலைவி நீயே!அதற்காக உன்னுடைய ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வேதங்கள், சிவாகமங்களால் விதிக்கப்பட்ட நீதி, தர்மசாஸ்திரப்படி எனக்கு நீ மனமுவந்து வழங்குகிற உயர்ந்த அந்தஸ்து, அள்ளக்குறையாத செல்வங்களால் இறைப்பணியும், எளியோர்க்குப் பசி தீர்க்கும் சேவையும் செய்வேன்! பாவங்கள் அனைத்தும் நீங்கி மனிதனாகச் செய்யும் உனது அருட்பார்வை மட்டும் எனக்குக் கிடைத்தால் போதும். மகான்களுக்கும் தபஸ்விகளுக்கும் மகரிஷிகளுக்கும் காட்சி கொடுத்ததுபோல எனக்கும் காட்சிதந்து அருள்வாய்!' தர்மச்சக்கரம் படத்தை 6 ஷ் 6 அளவில் வரைந்து வீட்டு ஹாலில் கிழக்கு முகமாக இருக்கச் செய்யலாம்.
தினந்தோறும் காலையோ மாலையோ தர்மச்சக்கரத்தின்முன் ஒரு குத்துவிளக்கை ஏற்றி வைத்து, மனதை ஒருநிலைப்படுத்திச் சமதரையில் அமர்ந்து, அரைமணி நேரம் மேற்கண்ட வேண்டுதலை தியானம் செய்ய வேண்டும். அவசரப்படாமல் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். தர்மங்கள், அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று நீதி சாஸ்திரம், தர்மசாஸ்திரம் ஆகிய நூல்களில் உள்ளவற்றை எடுகோள்களாக அச்சிட்டுப் பிறருக்கு வழங்கலாம். ஆலயப்பணிகளில் பங்குபெற்று சேவைகளைச் செய்யலாம். முக்கியமாக ஐந்து பணிகளைத் தன் பிறவி தர்மசேவையாகச் செய்வது தர்மதேவதைக்குப் பிடித்தமான செயலாகச் சொல்லப்பட்டுள்ளது.
1. தினமும் மூன்றுபேருக்காவது அன்னம் அளிக்கலாம்.
2. ஆலயத்தில் வாரம் ஒருமுறை அன்ன சேவை செய்யலாம்.
3. திருமுறைகள், வேதங்களைப் படிப்போர், ஓதுபவர்களுக்கு திரவிய ஊக்கம் அளிக்கலாம்.
4. இறைவன் கோவில் கொண்ட கருவறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து தீபமிட்டு வரவேண்டும்.v 5. திருமணங்களுக்கு மாங்கல்யதாரணம் செய்ய தர்மசேவை செய்யலாம்.
ஒவ்வொருவருக்கும் ஜாதகப்படி தர்மசேவைகள் செய்வதற்கு தர்ம சாஸ்திரப்படி விதிகள், கடமைகள் இருக்கின்றன.
1. யஜனம்- தர்மவடிவான அக்னிக்கு உணவுதரல்.
2. யாஜனம்- பிறரிடம் பொருள் பெற்று உயர்தல்.
3. ப்ரதிக்ரஹம்- பெற்ற பொருள், பணத்தைப் பிறருக்கும் தரவேண்டும். இதிலுள்ள மூன்றாவது கட்டளைப்படி தர்மம் செய்தால், தர்மதேவதை அனைவரது வாழ்வையும் வளமாக்குவாள்.
செல்: 91765 39026